இஸ்ரேல், ஈரான் மோதல் ; வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அயதுல்லா அலி
இஸ்ரேல் - இரான் மோதலின் ஒரு முக்கியமான கட்டத்தில் ஆயதுல்லா அலி காமனெயி இல்லாதது குறித்த வெளியான வதந்திக்கு அவர் தொலைக்காட்சியில் மீண்டும் தோன்றியதன் மூலம், பல ஊகங்களுக்குத் தற்போதைக்கு ஒரு முற்றுப்புள்ளியை வைத்துவிட்டார்.
ஆயதுல்லா அலி காமனெயி இல்லாதது குறித்த ஊகங்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஜூன் 26 அன்று அவர் தொலைக்காட்சியில் தோன்றினார்.
கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு அவர் ஒரு வீடியோவில் தோன்றியுள்ளார். இஸ்ரேல், இரான் இடையிலான மோதல் தொடங்கி 12 நாட்களில் திடீரென போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
அதன் பிறகு அவரது இந்தக் காணொளிச் செய்தி வந்துள்ளது. இந்தக் காலகட்டம் முழுவதும் காமனெயி அசாதாரணமான மௌனத்தைக் கடைபிடித்தார்.
ஆயதுல்லா அலி காமனெயி நாட்டின் உச்ச தலைவர் மட்டுமல்ல, இரான் ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியும் என்பதால், இஸ்ரேலுடனான போர் போன்ற மிகவும் முக்கியமான சம்பவத்தில் அவரிடம் இருந்து எந்தவித செய்தியும் வராதது கவலைகளை அதிகரித்தது.
அவரது உடல்நலம், பாதுகாப்பு மற்றும் நாட்டின் முக்கியமான முடிவுகளில் அவருக்கு உள்ள கட்டுப்பாடு தொடர்பாக வதந்திகள் பரவின.
அதிலும், அவர் தனது கடைசி காணொளியில், கடுமையான நெருக்கடியின்போது சாதாரணமாகப் பேசியது அசாதாரணமாகக் கருதப்பட்டது என்ற போதிலும், அவர் தொலைக்காட்சியில் மீண்டும் தோன்றியதன் மூலம், பல ஊகங்களுக்குத் தற்போதைக்கு ஒரு முற்றுப்புள்ளியை வைத்துவிட்டார்.
ஆனால் இரான் இதுவரை இல்லாத ஒரு நெருக்கடியை எதிர்கொண்டிருந்தபோது அவர் நீண்ட காலம் மௌனமாக இருந்ததற்கான காரணங்கள் மற்றும் அதிகாரத்தின் மீதான அவரது கட்டுப்பாடு குறித்த கேள்விகள் இன்னும் அப்படியே உள்ளன.