காசாவில் 24 மணிநேரத்தில் 20 பலஸ்தீனர்கள் பலி
காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படும் வான்வழி மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தது 20 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2025 ஒக்டோபரில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், காசா பகுதியில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதேவேளை, 2024 ஜனவரியில் ஐந்து வயது சிறுமி ஹிந்த் ராஜப் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலும் இஸ்ரேல் இராணுவம் தற்போது குற்றவியல் விசாரணையை ஆரம்பித்துள்ளது.

ஹிந்த் ராஜப்பின் குடும்பத்தினர் அப்பகுதியிலிருந்து வெளியேற முயன்றபோது, அவர்களின் வாகனத்தின் பாதையை இஸ்ரேலிய இராணுவ டாங்கி ஒன்று தடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனத்திற்குள் சிக்கியிருந்த அவர்கள் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களில் ஹிந்தின் 15 வயது உறவினரான லயானும் அடங்கினார். தாக்குதலின்போது உதவிக்காக அவசர மருத்துவப் பணியாளர்களை தொலைபேசியில் தொடர்புகொண்ட அவர், பின்னர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டபோது சம்பவ இடத்தில் தங்களது டாங்கிகளோ அல்லது இராணுவ வீரர்களோ இருக்கவில்லை என இஸ்ரேல் ஆரம்பத்தில் மறுத்திருந்தது.
காசாவில் தொடர்ந்து இடம்பெறும் தாக்குதல்கள் குறித்து சர்வதேச அளவில் கேள்விகள் எழுந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றன.