பாலஸ்தீனியர்களுக்கு இஸ்ரேல் விடுத்துள்ள சூளுரை
பணயக் கைதியாகப் பிடித்துச் செல்லப்பட்ட ‘அர்பெல் யேஹுட் ‘(Arbel Yehud)விடுதலை செய்யப்படும்வரை பாலஸ்தீனியர்கள் வடக்கு காசாவுக்கு திரும்ப அனுமதிக்கமாட்டோம் என இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கும், காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பிற்கும் இடையே கடந்த ஓராண்டுக்கு மேல் நீடித்து வந்த போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, போர் நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் தங்கள் வசம் உள்ள இஸ்ரேலிய பணய கைதிகளில் 7 பெண்களை இதுவரை விடுதலை செய்துள்ளது. இதற்கு ஈடாக 290 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளது.
குறிப்பாக இன்று இஸ்ரேலிய ராணுவ வீராங்கனைகள் 4 பேரை ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. இதற்கு ஈடாக 200 பாலதீனியர்களை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளது.
பணய கைதிகளில் அர்பெல் யாஹுட் என்ற இஸ்ரேலிய பெண்ணையும் ஹமாஸ் ஆயுதக்குழு விடுதலை செய்ய வேண்டுமென இஸ்ரேல் தெரிவித்திருந்தது. ஆனால் அர்பெல் யாஹுட்டை ஹமாஸ் அமைப்பு விடுதலை செய்யவில்லை.
இந்நிலையில், அர்பெல் யேஹுட் விடுதலை செய்யப்படும்வரை பாலஸ்தீனியர்கள் வடக்கு காசாவுக்கு திரும்ப அனுமதிக்கமாட்டோம் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதேவேளை பணய கைதி அர்பெல் யாஹுட் உயிருடன் இருப்பதாகவும், அவர் விடுதலை செய்யப்படுவார் என்றும் ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.