தீவிரமடைந்த தாக்குதல் ; அவசரமாக மூடப்பட்ட தெஹ்ரான் சர்வதேச விமான நிலையம்
ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான போர் பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில் ஈரானின் தலைநகரான தெஹ்ரான் நகரில் அமைந்துள்ள இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையத்திற்கான அனைத்து உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் விமானச் சேவைகளும் மறு அறிவித்தல் வரை அவசரமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஈரான் நேற்று இரவு இஸ்ரேல் மீது மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்காசியாவில் நிலவி வரும் போர்ச் சூழ்நிலையை அடுத்து ஈரானின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை வான்வெளி கட்டுப்பாடுகளை அமுல்படுத்தியுள்ளது.
அத்துடன், விமான நிலையத்திற்கான அனைத்து சேவைகளும் அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை இரத்து செய்யப்பட்டுள்ளன.
ஈரான் இஸ்ரேல் தாக்குதலை அடுத்து பல வாரங்களாக மூடப்பட்டிருந்த இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையம் கடந்த ஏப்ரல் மாதம் மீண்டும் திறக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.