அமெரிக்காவின் பச்சை சிக்னலுக்காகக் காத்திருக்கின்றோம் ; இஸ்ரேல் தரப்பில் வெளியான தகவல்
ஈரானுக்கு எதிரான போரை மீண்டும் தொடங்குவதற்கும், அந்நாட்டை இருண்ட யுகத்திற்கு கொண்டு செல்வதற்கும் தமது நாடு தயாராக இருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேலிய இராணுவம் முதன்மையாக கமேனியின் வம்சத்தை முற்றிலுமாக அழிப்பதற்காக அமெரிக்காவின் பச்சை சிக்னலுக்காகக் காத்திருப்பதாக இஸ்ரேல் காட்ஸ் கூறியுள்ளார்.

ஈரானின் எரிசக்தி மற்றும் பொருளாதார உட்கட்டமைப்புகளைத் தாக்குவதன் மூலம் அந்நாட்டை இருண்ட காலத்திற்கு தள்ளப்போவதாகவும் அவர் அச்சுறுத்தியுள்ளார்.
இந்த முறையிலான தாக்குதல் மிகவும் வித்தியாசமானதாகவும், உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருக்கும். அத்துடன் மிகவும் வலிமிகுந்த இடங்களில் பேரழிவு தரும் அடிகளை வழங்கும் இது ஈரானின் அடித்தளத்தையே உலுக்கி சரிக்கும் என்று காட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக ஏப்ரல் மாத தொடக்கத்தில், போரை முடிவுக்குக் கொண்டுவர ஏற்றுக்கொள்ளக்கூடிய உடன்படிக்கைக்கு ஈரான் வராவிட்டால், அந்நாட்டை குண்டுவீசி பழமையான காலத்திற்கு அனுப்புவோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.