இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மருத்துவமனையில் அனுமதி
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஜெருசலேமில் உள்ள மருத்துவமனை ஒன்றில் திங்கள்கிழமை (மே 25) மாலை அனுமதிக்கப்பட்டதாக அவரது அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெஞ்சமின் நெதன்யாகு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, பிரதமரின் அலுவலகம் இந்த அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது.

'ஹதசா ஈன் கெரெம்' (Hadassah Ein Kerem) மருத்துவ மையத்தில் நெதன்யாகுவுக்குக் குறிப்பிட்ட சில பல் சிகிச்சைகள் (Dental treatment) மேற்கொள்ளப்பட்டு வருவதாக 'தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்' (The Times of Israel) ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
76 வயதான பிரதமர் நெதன்யாகுவின் உடல்நிலை குறித்த மருத்துவத் தகவல்கள், பொதுமக்களிடம் இருந்து திட்டமிட்டு மறைக்கப்படுவதாகக் கூறி கடந்த காலங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதன் காரணமாக, அவரது உடல்நிலை தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சூழலில், தற்போதைய மருத்துவமனை அனுமதி அவரது ஒட்டுமொத்த உடல்நிலை குறித்தான பல்வேறு சந்தேகங்களையும், ஊகங்களையும் இஸ்ரேலில் மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த மாதம், பிரதமர் நெதன்யாகு தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட நீண்ட பதிவொன்றில் தனக்கு ஏற்பட்டிருந்த புரோஸ்டேட் (Prostate) புற்றுநோய் பாதிப்பு குறித்துப் பேசியிருந்தார்.
தனக்கு 'புரோஸ்டேட்' சுரப்பியில் ஏற்பட்ட வீரியம் மிக்கக் கட்டிக்கு (Malignant tumor), ஹதசா மருத்துவமனையில் கதிர்வீச்சு சிகிச்சை (Radiation treatment) வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார். எனினும், இத்தகவலைப் பொதுமக்களுக்குத் தெரிவிக்காமல் அவர் தாமதப்படுத்தியிருந்தார்.
தற்போது நடந்து வரும் போரின் போது இத்தகவல் கசிந்திருந்தால், அதனை இஸ்ரேலுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்ய ஈரான் பயன்படுத்தியிருக்கும்," என்றும் அவர் வாதிட்டிருந்தார். ஆயினும், தமக்கு எப்போது புற்றுநோய் கண்டறியப்பட்டது, சிகிச்சை எப்போது தொடங்கியது அல்லது எப்போது முடிவடைந்தது என்பது குறித்த துல்லியமான விவரங்களை அவர் வெளியிடவில்லை.
அதுமட்டுமல்லாது நெதன்யாகுவுக்குக் கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூலையில் இதயத் துடிப்பு சீராக்கி (Pacemaker) பொருத்தப்பட்டதுடன், 2024 மார்ச்சில் குடலிறக்க (Hernia) அறுவை சிகிச்சையும், 2024 டிசம்பரில் புரோஸ்டேட் சுரப்பியை அகற்றும் (Prostate removal) அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.