ஆல்ப்ஸ் மலையில் மாயமான கனடா வீராங்கனை: ஒரு வார தேடுதலுக்குப் பின் மீட்புப் பணிகள் நிறுத்தம்!
ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் மாயமான கனடாவைச் சேர்ந்த 'ஸ்கைரன்னர்' கெய்லி மெக்கிரிஸ்டலைத் தேடும் பணியை இத்தாலிய அதிகாரிகள் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளனர்.
4,478 மீட்டர் உயரமுள்ள மேட்டர்ஹார்ன் சிகரத்தின் இத்தாலி பகுதியில், திங்கள்கிழமை வரை ஹெலிகாப்டர் மூலம் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளதாக இத்தாலி மலை மீட்புப் படையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
தேடுதல் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட போதிலும், கெய்லி மெக்கிரிஸ்டல் பயன்படுத்திய மின்னணு சாதனங்களில் இருந்து ஏதேனும் சிக்னல்கள் வருகின்றதா என்பதை 'வால் டி ஆஸ்டா' பிராந்தியத்தைச் சேர்ந்த மலை மீட்புப் பொலிஸார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

38 வயதான கெய்லி மெக்கிரிஸ்டல், கடினமான மற்றும் அதிக உயரமான மலைப்பகுதிகளில் ஓடிப் பழகிய பல ஆண்டுகால அனுபவம் கொண்டவர் என்று 'அத்லெடிக்ஸ் கனடா' அமைப்பு தெரிவித்துள்ளது.
மேட்டர்ஹார்ன் சிகரத்தை 5 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் ஏறி இறங்கி புதிய உலக சாதனை படைப்பதற்காக அவர் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த செப்டம்பர் 1 அன்று, சுமார் 3,800 மீட்டர் உயரத்தில் உள்ள மலை தங்குமிடத்திற்கு அருகில் செல்ஃபீ ஒன்றை எடுத்த பிறகு, சுமார் 4,250 மீட்டர் உயரத்தில் போலந்து நாட்டைச் சேர்ந்த மலை ஏறுபவர்களால் அவர் கடைசியாகப் பார்க்கப்பட்டார். அதன்பின்னர் அவர் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.