ஷின்சோ மீது அதிருப்தி... அதனால் சுட்டேன்: கைதானவர் வாக்குமூலம்
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவை துப்பாக்கியால் சுட்ட நபர், வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், தாம் ஷின்சோ அபே மீது கடும் அதிருப்தியில் இருததாகவும், அவரை கொலை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டிருந்ததாகவும் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை பகல் 11.30 மணியளவில் சுட்டுக்கொல்லப்பட்டார். இதில், 41 வயதான நபர் கைதாகியுள்ளார்.
ஜப்பான் கடற்படையின் தற்காப்புப் பிரிவு முன்னாள் உறுப்பினரான அவர், ஷின்சோவை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடனேயே அங்கு வந்ததாக வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
சம்பவம் நடந்த சில விநாடிகளிலேயே பாதுகாப்பு அதிகாரிகளால் அவர் சுற்றிவளைத்து கைது செய்யப்பட்டார். சம்பவத்தின் போது அவர் சாம்பல் நிற டிஷர்ட் மற்றும் பழுப்பு நிற பேன்ட் அணிந்திருந்தார். தோளில் ஒரு பையும் மாட்டியிருந்தார்.
அதில்தான் அவர் துப்பாக்கியை மறைத்து வைத்திருந்தார் என்று கூறப்படுகிறது. அதிருப்தியால் கொலை செய்தேன் என்று அவர் கூறியதால் ஏன், எதற்காக போன்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மட்டுமின்றி, தாக்குதலுக்காக அவர் பயன்படுத்திய துப்பாக்கி அவராலேயே தயாரிக்கப்பட்டது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.