தொழிற்சாலை ஒன்றில் பயங்கர தீ விபத்து: உடல் கருகி பலியான 4 தொழிலாளர்கள்!
ஜப்பானில் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (11-02-2022) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த விபத்து குறித்து தெரியவருவது, ஜப்பானில் வடகிழக்கு பகுதியான நிஜிகாடே என்ற இடத்தில் உணவு தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது. நேற்று நள்ளிரவு இந்த தொழிற்சாலையில் தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென இங்கு தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பற்றி எரிந்தது. இதில் தொழிலாளர்கள் சிக்கி கொண்டு வெளியே வர முடியாமல் தவித்தனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் 22-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகளில் வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் 4 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
30 தொழிலாளர்கள் தொழிற்சாலையில் சிக்கி உள்ளனர். அவர்களை தீயணைப்பு படையினர் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். தொடர்ந்து தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது.
தீயை முழுமையாக அணைத்தால்தான் எத்தனை பேர் இறந்தார்கள் என்பது தெரிய வரும். தீ விபத்துக்கான காரணம் என்னவென்று உடனடியாக தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.