ஜப்பானில் வீட்டிற்குள் நுழைந்து உணவு தேடிய கரடி!
ஜப்பானின் வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றின் சமையலறைக்குள் கரடி ஒன்று நுழைந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
ஜப்பானில் அண்மைக்காலமாக கரடிகளின் தாக்குதலால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானின் இவதே மாகாணத்திலுள்ள ஷிசுகுய்ஷி நகரில் கடந்த திங்கட்கிழமை இரவு இந்த அசாதாரண சம்பவம் நடந்துள்ளது.

வீட்டிற்குள் நுழைந்த கரடி ஒன்று, அங்கிருந்த குளிர்சாதனப் பெட்டியை எளிதாகத் திறந்து, அதிலிருந்த உணவுப் பொருட்களைத் தரையில் சிதறடித்துள்ளது.
பின்னர், சமையலறைக்கு அருகில் இருந்த கதவு வழியாக வெளியேறிய அந்தக் கரடி, அங்கிருந்த குப்பைத் தொட்டியிலும் உணவைத் தேடிவிட்டுச் சென்றிருப்பதை அதன் கால்தடங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
ஷிசுகுய்ஷி நகரில் கடந்த ஜூலை 5 ஆம் திகதிக்குப் பின்னர், வீடுகளுக்குள் கரடிகள் புகுந்ததாகப் பதிவாகும் 5-வது சம்பவம் இதுவாகும். குளிர்கால உறக்கத்திலிருந்து வெளிவந்த பிறகு, கரடிகள் நகரங்களுக்குள் ஊடுருவுவது கணிசமாக அதிகரித்துள்ளது.
ஜப்பானில் அண்மைக்காலமாக கரடித் தாக்குதல்கள் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன. ஜப்பானிய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தரவுகளின்படி, கடந்த ஏப்ரல் 1 ஆம் திகதியிலிருந்து இதுவரை டோஹோகு பிராந்தியத்தில் மட்டும் கரடித் தாக்குதலால் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.