ஜப்பான் அரசியலில் சர்ச்சை ; கழிவறை வசதி கோரி ஜப்பான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம்
ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனாயே டகாயிச்சி (Sanae Takaichi) கடந்த அக்டோபரில் பதவியேற்றதைத் தொடர்ந்து, அந்நாட்டு அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் சற்று அதிகரித்துள்ளது.
இருப்பினும், நாடாளுமன்றக் கட்டடத்தில் பெண்களுக்கான அடிப்படை வசதிகள் இன்னும் ஆண்களுக்கு நிகராக இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத்தின் பிரதான மண்டபத்திற்கு அருகில் 73 பெண் உறுப்பினர்களுக்குப் பயன்படுத்துவதற்கு இரண்டு அறைகளைக் கொண்ட ஒரேயொரு மலசலக்கூடம் மாத்திரமே உள்ளது.
இதனால் அமர்வுகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் பெண் உறுப்பினர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர் யசுகோ கோமியாமா கவலை வெளியிட்டுள்ளார்.
மேலும், 1936 இல் கட்டப்பட்ட இந்நாடாளுமன்றக் கட்டடத்தில், ஆண்களுக்காக 67 அறைகளைக் கொண்ட 12 மலசலக்கூடங்கள் உள்ளன. ஆனால் பெண்களுக்கு மொத்தமாகவே 22 அறைகளைக் கொண்ட 9 கழிவறை வசதிகள் மட்டுமே உள்ளன எனக் கூறப்படுகின்றது.
இந்தநிலையில், பிரதமர் சனாயே டகாயிச்சி உள்ளிட்ட சுமார் 60 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து, மேலதிக மலசலக்கூட வசதிகளைக் கோரி நாடாளுமன்ற நிர்வாகக் குழுவிடம் மனுவொன்றைக் கையளித்துள்ளனர்.

உலகப் பொருளாதார மன்றத்தின் பாலின இடைவெளி அறிக்கையில் ஜப்பான் மிகவும் பின்தங்கிய நிலையில் (118வது இடம்) உள்ளது. தற்போது 465 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 72 பேர் மட்டுமே பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதைக் காட்டும் ஒரு அடையாளமாக இக்கோரிக்கை பார்க்கப்பட்டாலும், ஜப்பானில் பாலின சமத்துவத்தைப் பேணுவதில் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது என்பதை இது உணர்த்துவதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.