அரிசியால் பெரும் சர்ச்சையில் சிக்கிய ஜப்பானின் விவசாய அமைச்சர் இராஜினாமா!
ஜப்பானின் விவசாய அமைச்சராக இருந்த டகு எடோ (Taku Eto) , “நான் அரிசியை வாங்குவதில்லை; ஆதரவாளர்களிடம் இருந்து இலவசமாகவே பெறுகிறேன்” எனத் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
ஜப்பானில் உணவுப் பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் கடும் பொருளாதார சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், அமைச்சரின் இந்த கருத்து பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
இதேவேளை அவரது கருத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகளும் கடுமையான கண்டனம் தெரிவித்திருந்தன. அத்துடன் தாகு எதோவை பதவியில் இருந்து நீக்க நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
குறித்த விவகாரம் ஜப்பான் பிரதமர் ஷிகெரு ஈஷிபா தலைமையிலான அரசாங்கத்திற்கு பெரும் தலைவலியாக மாறியது. இந்நிலையில் தான் தெரிவித்த கருத்துதவறானது எனவும், அதற்காக வருந்துவதாகவும் தெரிவித்த டகு எடோ, விவசாய அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் ஷிஞ்ஜிரோ கோயிசுமி புதிய விவசாய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.