700 மீற்றர் பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப் ; 20 பேர் பலி
நேபாளத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில், 20 பக்தர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் நேபாளத்தின் ரோல்பா மாகாணம், ஜல்ஜாலா மலைப்பகுதியில் வியாழக்கிழமை (30) மாலை இடம்பெற்றுள்ளது.
தலைநகர் காத்மாண்டுவில் இருந்து சுமார் 500 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள இந்த மலைப்பகுதியில், சுமார் 3,000 அடி உயரத்தில் உள்ள பௌத்த மடாலயத்தை நோக்கிச் சென்ற பக்தர்கள் பயணித்த ஜீப் விபத்துக்குள்ளானது.

இன்று வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள புத்த பூர்ணிமா விழாவைக் கொண்டாடுவதற்காக நாடு முழுவதும் இருந்து பலர் அந்த மடாலயத்திற்குச் சென்றுகொண்டிருந்தனர்.
அவ்வாறு மலைப்பாதையில் பயணித்த ஜீப், திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்ததாக தெரிவிக்கப்படுகிறது கட்டுப்பாட்டை இழந்த ஜீப், மலைப்பாதையிலிருந்து விலகி சுமார் 700 மீற்றர் ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் ஜீப்பில் பயணித்த 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து நடைபெற்ற பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மீட்புப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
மீட்பு குழுக்கள் கடினமான நிலைமைகளுக்கு மத்தியில் பணிகளை முன்னெடுத்து வருகின்றன.
இந்த விபத்து தொடர்பாக நேபாள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.