ட்ரம்பின் புதிய வரிகளால் கனடாவில் வேலை இழப்புகள் தவிர்க்க முடியாது
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனேடியப் பொருட்களுக்கு புதிய கடுமையான இறக்குமதி வரிகளை விதித்துள்ள நிலையில், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் வேலை இழப்புகள் “தவிர்க்க முடியாதவை” எனவும், சிறு மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்களின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளதாகவும் பிரிட்டிஷ் கொலம்பிய வர்த்தக சம்மேளனம் எச்சரித்துள்ளது.
அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தொடர்பாக கனடா பிரதமர் மார்க் கார்னி முடிவெடுத்துள்ள நிலையில், புதிய வர்த்தக நடவடிக்கைகளை தொழில் துறையினர் கவலையுடன் அவதானித்து வருகின்றனர்.
வர்த்தகப் போரில் ஏற்பட்டுள்ள அண்மைய மாற்றம் மீண்டும் அதே நிச்சயமற்ற சூழ்நிலைக்கே தொழில் துறையை கொண்டு சென்றுள்ளதாக வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் ஜென் ரெய்லி தெரிவித்துள்ளார்.

கடந்த 21 மாதங்களில் வர்த்தக நிலைப்பாட்டில் 15 மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்தத் தொடர்ச்சியான மாற்றங்கள் காரணமாக வர்த்தக நிறுவனங்கள் தொடர்ந்து நிச்சயமற்ற சூழலில் இயங்க வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களே புதிய வரிகளால் அதிகளவில் பாதிக்கப்படக்கூடும் என ஜென் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சில கனேடியப் பொருட்களுக்கு தற்போது 50 சதவீதம் வரை இறக்குமதி வரி விதிக்கப்படுவதால், அந்த அளவிலான வரியை சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களால் தாங்கிக்கொள்ள முடியாது என அவர் கூறியுள்ளார்.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இந்தச் சூழ்நிலையிலிருந்து பாதிப்பின்றி வெளியேற முடியுமா என்பது குறித்து நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே நெருக்கடியை எதிர்கொண்டு வரும் சொப்ட்வுட் லும்பர் எனப்படும் மென்மரத் தொழில்துறையும் புதிய வரிகளால் மேலும் பாதிக்கப்படுவதாக வர்த்தக சம்மேளனம் தெரிவித்துள்ளது.
மென்மர ஏற்றுமதிக்கு ஏற்கனவே மொத்தமாக 45 சதவீத வரிகள் விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக வேலை இழப்புகள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாக இருக்கலாம் என அவர் எச்சரித்துள்ளார்.
எனினும், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில் கனடாவின் இறையாண்மை தொடர்பான விடயங்களும் முன்வைக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், பிரதமர் மார்க் கார்னி எடுத்த முடிவு சரியானது என்றே தான் கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார்.