சிஐஏவுடன் சேருங்கள்; கியூபா மக்களை வலியுறுத்தும் மார்கோ ரூபியோ
கியூபாவில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்கள், அமெரிக்காவின் மத்திய உளவு அமைப்பான சிஐஏவுடன் இரகசியமாக இணைந்து செயல்படுமாறு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ வலியுறுத்தியுள்ளார்.
கியூபாவின் கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இந்த நிலையில், மார்கோ ரூபியோ இன்று (24) இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

இதுவே சரியான தருணம்
கியூபாவில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்புவோருக்கு இதுவே சரியான தருணம் எனக் குறிப்பிட்டுள்ள அவர், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள், ஊழல் மற்றும் ஒரு சிலருக்கே கிடைக்கும் சலுகைகள் காரணமாக ஏற்பட்டுள்ள அதிருப்தியைப் பயன்படுத்தி, சிஐஏவுடன் ரகசியமாக இணைந்து தாங்கள் விரும்பும் மாற்றத்தை உருவாக்குமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.
அதேவேளை ஏற்கனவே, கியூபாவுக்கு எதிராக எரிசக்தி கட்டுப்பாடுகளை விதித்துள்ள அமெரிக்கா, அந்நாட்டுக்குக் கச்சா எண்ணெயைக் கொண்டு செல்லும் கப்பல்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக கியூபாவில் மின்சாரம் மற்றும் எரிசக்தி உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கான தட்டுப்பாடு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது
. ஈரானைத் தொடர்ந்து கியூபாவுக்கு எதிராகவும் கடற்படைக் கப்பல்கள் மூலம் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.