ஜஸ்டின் ட்ரூடோ – கேட்டி பெர்ரி உறவு வதந்தி மீண்டும் பரபரப்பு
கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அமெரிக்கப் பாடகி கேட்டி பெர்ரி இடையேயான காதல் வதந்தி மாதக்கணக்கில் சர்வதேச ஊடகங்களில் பேசுபொருளாக இருந்து வருகிறது.
அண்மையில் ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஃபுமியோ கிஷிதா தன் மனைவியுடன் சேர்ந்து ட்ரூடோ மற்றும் பெர்ரியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து, இந்த வதந்தி மேலும் தீவிரமடைந்துள்ளது.
கிறிஸ்துமஸ் மரம் முன் நின்று பெர்ரியின் தோளில் கை வைத்தபடி ட்ரூடோ இருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த பதிவில் கிஷிதா, கேட்டி பெர்ரியை ட்ரூடோவின் “பங்காளர்” என குறிப்பிட்டது கனடியர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ட்ரூடோவும் அந்தப் பதிவை மீண்டும் பகிர்ந்து, “கேட்டி மற்றும் நான் உங்களுடனும் யுகோவுடனும் அமர்ந்து பேச வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி” என குறிப்பிட்டுள்ளார்.
இருவரும் இதுவரை தங்கள் உறவை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. மறுபக்கம், கேட்டி பெர்ரியும் கடந்த ஜூனில் நடிகர் ஓர்லாண்டோ ப்ளூமுடன் தனது 10 வருட உறவை முடித்ததாக அறிவித்திருந்தார்.
ட்ரூடோ, சுமார் 12 ஆண்டுகள் லிபரல் கட்சிக்கு தலைமை தாங்கிய பின்னர், 2025 ஜனவரியில் அடுத்தத் தேர்தலுக்கான வேட்பாளராக தன்னைப் பார்க்க முடியாது என தெரிவித்து கட்சித் தலைமை பொறுப்பை விலக்கிக் கொண்டார்.