கனடாவில் விமான விபத்தில் கேரள இளைஞர் பலி
கனடாவில் இரண்டு பயிற்சி விமானங்கள் நடுவானில் மோதிக்கொண்டதில் கேரள இளைஞர் ஒருவர் உட்பட இருவர் பரிதாபமாக பலியானார்கள்.
கனடாவின் மனித்தோபாவில் அமைந்துள்ள விமான பயிற்சிப் பள்ளியில் பயின்றுவந்துள்ளார் கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீஹரி சுகேஷ் (23).
செவ்வாயன்று விமானப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சுகேஷ், சிறிய ரக விமானம் ஒன்றை இயக்கிக்கொண்டிருந்திருக்கிறார்.
அப்போது, அதே பயிற்சிப் பள்ளியில் பயின்றுவந்த சவன்னா மே (Savanna May Royce, 20) என்னும் கனடா நாட்டவரான மாணவியும் விமானத்தை தரையிறக்க முயன்றுள்ளார்.
இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் கவனிக்காமல் ஒரே நேரத்தில் தரையிறக்க முயல, இரண்டு விமானங்களும் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளன.
மோதியதில் இரண்டு விமானங்களும் தீப்பிடித்து எரிய, விமானங்களில் பயணித்த சுகேஷ், சவன்னா ஆகிய இருவருமே பலியாகிவிட்டார்கள்.
அதிகாரிகள் இந்த துயர சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.