கிம் ஜாங் உன் மரணமானாரா? சர்ச்சையை முடித்த புதிய புகைப்படங்கள்
வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் மாரடைப்பு அல்லது மூளை இரத்தக் கசிவு ஏற்பட்டு கோமா நிலைக்குள்ளாகி இறந்துவிட்டதாகவும், அவரது உடல் சீனாவுடனான இரகசிய நடவடிக்கைகளுக்குப் பின் கொண்டுவரப்பட்டதாகவும் சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவின.
இந்த வதந்திகளைப் பொய்ப்பிக்கும் வகையில், கிம் ஜாங் உன் பியாங்யாங்கில் உள்ள ஆடை மற்றும் காலணி கண்காட்சியைப் பார்வையிடும் புதிய புகைப்படங்களை இன்று செவ்வாய்க்கிழமை (20) வட கொரியாவின் உத்தியோகபூர்வ ஊடகம் வெளியிட்டுள்ளது.

வதந்திகள்
வெளியிடப்பட்ட இந்தப் புகைப்படங்களில், கிம் ஜாங் உன் தனது மனைவி ரி சோல்-ஜு மற்றும் மகள் கிம் ஜு-ஏ ஆகியோருடன் கலந்துகொண்டுள்ள படங்களே இவ்வாறு வெளியிட்டுள்ளது.
கிம் ஜாங் உன்னின் இறப்பு குறித்த வதந்திகள் சர்வதேச அளவில் பரவுவது இது முதல் முறையல்ல. 2020 ஆம் ஆண்டில், அப்போதைய தென் கொரிய நாடாளுமன்ற உறுப்பினருமான ஜி சியோங்-ஹோ , கிம் இதய அறுவை சிகிச்சைக்குப் பின் இறந்துவிட்டதாகத் தான் "கிட்டத்தட்ட உறுதியாக" நம்புவதாக தெரிவித்திருந்தார்.
ஆனால், அதன்பின் கிம் பொதுவெளியில் தோன்றியதைத் தொடர்ந்து, ஜி சியோங்-ஹோ தனது தவறான தகவலுக்காக மன்னிப்புக் கோரினார்.
வெளியான புகைப்படங்கள் மரண வதந்திகளை மறுக்கும் வகையில் இருந்தாலும் கிம் இன் உடல்நிலை குறித்த பரந்த கேள்விகளுக்கு இன்னும் தெளிவான பதில்கள் இல்லை.
வட கொரியாவில் ஜனாதிபதிகளின் நடமாட்டம் மிகவும் இரகசியமாக வைக்கப்படுவதால், அவர்களின் பொதுத் தோற்றங்களில் ஏற்படும் சிறிய இடைவெளி கூட இது போன்ற வதந்திகளுக்கு வித்திடுகிறது.
வட கொரியாவில் ஊடகங்கள் மற்றும் தலைமைத்துவம் மீதான அரசின் இறுக்கமான கட்டுப்பாடுகளினால், இது போன்ற வதந்திகள் எளிதில் பரவுகின்றன.
அரச ஊடகங்கள் வெளியிடும் புகைப்படங்கள் வதந்திகளைத் தற்காலிகமாக மறுத்தாலும், சுயாதீனமான ஊடகங்களால் அவற்றை நேரடியாகச் சரிபார்க்க முடியாத நிலை தொடர்கிறது.