வடகொரியாவின் அடுத்த வாரிசாகும் கிம்மின் மகள்!
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னின் மகள் கிம் ஜு ஏ, அதிகாரபூர்வ வாரிசாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தென்கொரியாவின் தேசிய உளவு அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜு ஏ-வின் வயது சுமார் 13 என நம்பப்படுகிறது. ஜு ஏ பொது நிகழ்ச்சிகளில் தொடர்ந்து முன்னிலைப்படுத்தப்படுவதே இதற்கு முக்கியக் காரணமாகக் குறிப்பிட்டுள்ளது.

தந்தையுடன் பீஜிங்கிற்கு பயணம்
முன்னதாக வாரிசுக்கான பயிற்சியில் இருப்பதாகக் கருதப்பட்ட ஜு ஏ, தற்போது வாரிசு பதவிக்கான நியமன நிலையை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த செப்டம்பரில் தனது தந்தையுடன் பீஜிங்கிற்கு அவர் மேற்கொண்ட பயணம், அவரது முதல் வெளிநாட்டுப் பயணமாகப் பதிவாகியுள்ளது.
கொரிய மக்கள் இராணுவத்தின் ஆண்டு விழா மற்றும் கும்சுசன் சூரிய அரண்மனை விஜயம் போன்ற முக்கிய நிகழ்வுகளில் ஜு ஏ-வின் பங்கேற்பு மற்றும் அரசு கொள்கைகளில் அவர் கருத்து தெரிவிப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதால், அவர் வாரிசாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக உளவு அமைப்பு கருதுகிறது.
2013 இல் வடகொரியாவிற்குச் சென்ற அமெரிக்கக் கூடைப்பந்து வீரர் டென்னிஸ் ரோட்மேன் மூலமே இவரது பெயர் முதலில் உலகிற்குத் தெரிந்தது. வடகொரியாவில் ஒரு தனி நபர், கிம் ஜொங் உன்னுக்கு நிகராகப் புகைப்படங்களில் முன்னிலைப்படுத்தப்படுவது மிகவும் அரிதானது.
இந்நிலையில் சமீபகாலமாக ஜு ஏ தனது தந்தைக்குச் சமமாக நடப்பதும், உயரமாக வளர்ந்து நிற்பதும் அங்கே பெரும் குறியீடாகப் பார்க்கப்படுகிறது. இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள வடகொரியாவின் 'கட்சி காங்கிரஸ்' கூட்டத்தில் கிம் ஜு ஏ பங்கேற்பாரா என்பதைத் தென்கொரிய உளவு அமைப்பு உன்னிப்பாகக் கவனித்து வருவதாக கூறப்படுகின்றது.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த முக்கியக் கூட்டத்தில்தான் வெளியுறவுக் கொள்கை மற்றும் அணு ஆயுதத் திட்டங்கள் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.