அமெரிக்காவிற்கு இன்று விஜயம் செய்யும் மன்னர் சார்ள்ஸ்!
பிரித்தானிய மன்னர் சார்ள்ஸின் அமெரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயம் திட்டமிட்டபடி திங்கட்கிழமை ஆரம்பிக்கும் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. சனிக்கிழமை (25) இரவு நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தையடுத்து, மன்னரின் பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுந்தன.
இது தொடர்பில் பேட்டியளித்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், "மன்னரின் வருகை மகிழ்ச்சியளிக்கிறது. அவர் இங்கு மிகவும் பாதுகாப்பாக இருப்பார். வெள்ளை மாளிகை வளாகம் மிகவும் பாதுகாப்பானது. மேலதிக அச்சுறுத்தல்கள் இருப்பதாகத் தகவல்கள் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.

வொஷிங்டனில் பாதுகாப்புப் பணிகள்
பிரித்தானிய மற்றும் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட விரிவான ஆலோசனைகளுக்குப் பின்னர், பக்கிங்ஹாம் அரண்மனை ஊடகப் பேச்சாளர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
"மன்னரும் ராணி கமிலாவும் திங்கட்கிழமை தங்களது பயணத்தை ஆரம்பிக்க ஆவலாக உள்ளனர். இந்த இக்கட்டான சூழலில் துரிதமாகச் செயல்பட்ட பாதுகாப்புப் பிரிவினருக்கு அவர்கள் நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மன்னர் சார்ள்ஸ் மற்றும் ராணி கமிலா நான்கு நாட்கள் அமெரிக்காவில் தங்கியிருப்பார்கள் எனவும், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புடன் தனிப்பட்ட ரீதியிலான சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது எனவுமு் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்க சுதந்திரத்தின் 250-வது ஆண்டைக் குறிக்கும் வகையில், அமெரிக்க காங்கிரஸில் மன்னர் உரையாற்றவுள்ளார்.
ஈரான் போர் தொடர்பான கருத்து வேறுபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள இருநாட்டு உறவுகளைப் பலப்படுத்துவதே இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னரின் வருகையை முன்னிட்டு வொஷிங்டனில் பாதுகாப்புப் பணிகள் இருமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன.
அதேவேளை துப்பாக்கிச் சூட்டில் ஜனாதிபதி ட்ரம்ப் காயமின்றி தப்பியதற்கு மன்னர் சார்ள்ஸ் தனது நிம்மதியைத் தெரிவித்ததுடன், தனிப்பட்ட முறையில் அவருக்குத் தனது வாழ்த்துச் செய்தியையும் அனுப்பியுள்ளார்.