ஒன்டாரியோவில் வரலாற்றில் மிகப்பெரிய லாட்டோ மேக்ஸ் பரிசு
ஒன்டாரியோ மாகாண வரலாற்றிலேயே மிகப்பெரிய லாட்டோ மேக்ஸ் (Lotto Max) பரிசான 75 மில்லியன் டொலர் பணப்பரிசு வென்றெடுக்கப்பட்டுள்ளது.
கிங்ஸ்டனில் வசிக்கும் டேவிட் ஹாட் (David Hatt) என்பவர் இந்த பரிசுத் தொகையை வென்றுள்ளார். ஒன்டாரியோ லொத்தர் மற்றும் கேமிங் கழகம் (OLG) இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 19ம் திகதி நடைபெற்ற லாட்டோ மேக்ஸ் சீட்டிலுப்பில் முதன்மை பரிசை வென்றுள்ளார்.
டிக்கெட் வாங்கியது முற்றிலும் தற்செயலாகத்தான். வழக்கம்போல பெட்ரோல் நிலையம் அருகே சென்றபோது ‘ஒரு டிக்கெட் வாங்கிக்கொள்ளலாம்’ என்ற உணர்வு ஏற்பட்டது.
உடனே குயிக் பிக் டிக்கெட் வாங்கியதாகவும் பின்னர் அதனை மறந்துவிட்டதாகவும் ஹாட் தெரிவித்துள்ளார். பின்னர் OLG மொபைல் செயலியில் டிக்கெட்டைச் சரிபார்த்துள்ளார்.
முதலில் நான் 75,000 டொலர் வென்றிருக்கிறேன் என்று நினைத்தேன் – அதுவே பெரிய விஷயம் என்று மகிழ்ந்தேன். ஆனால் மீண்டும் பார்த்தபோது நிறைய பூஜ்யங்கள் இருப்பதை கவனித்தேன்!” என்று ஹாட் கூறினார்.
பரிசு வென்ற டிக்கெட் கிங்ஸ்டனிலுள்ள பையனியர்/ஸ்நாக் எக்ஸ்பிரஸ் பெட்ரோல் நிலையத்தில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
இந்த 75 மில்லியன் டொலர் வெற்றி, கனடாவில் இதுவரை வழங்கப்பட்ட இரண்டாவது பெரிய லொத்தர் பரிசாகும் — இதற்கு முன், இந்த ஆண்டு தொடக்கத்தில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் (B.C.) ஒருவர் $80 மில்லியன் பரிசை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.