நடுவானில் திடீரென சரிந்த கொரியன் ஏர் விமானம்
கொரியன் ஏர் விமானம் 15 நிமிடங்களில் 26,900 அடிக்கு கீழே விழுந்த நிலையில் விமானம் நடுவானில் திடீரென சரிந்ததால் விமானம் தைச்சுங் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக அந்நாட்டு செய்திகளில் வெளியாகியுள்ளன.
கொரியன் ஏர் விமானம் சியோலின் இன்சியான் சர்வதேச விமான நிலையத்திலிருந்து தைவானில் உள்ள தைச்சுங் சர்வதேச விமான நிலையத்திற்கு புறப்பட்டது.
கடந்த ஜூன் 22ம் திகதி மாலை 4.45 மணிக்கு விமானம் புறப்பட்ட நிலையில் விமானம் புறப்பட்டு 50 நிமிடங்களுக்குப் பிறகு, விமானத்தின் காற்றோட்டத்தை சீராக வைத்திருக்கும் அழுத்த அமைப்பில் கோளாறு ஏற்பட்டது.
இதன் காரணமாக விமானம் 15 நிமிடங்களில் 26,900 அடிக்கு கீழே விழுந்த நிலையில் விமானம் நடுவானில் திடீரென சரிந்ததால் பயணிகள் அலறினர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பயணிகளுக்கு சுவாசக் கோளாறு ஏற்படாமல் இருக்க விமானத்தில் இருந்த ஆக்ஸிஜன் முகமூடிகள் விடுவிக்கப்பட்டன.
பயணிகள் முகமூடி அணிந்திருந்ததால், அவர்களுக்கு பெரும் சேதம் ஏதும் ஏற்படாமல் விமானம் தைச்சுங் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அங்கிருந்து விமானத்தில் பயணம் செய்த 17 பயணிகளும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளதுடன் யாருக்கும் பெரிய காயம் ஏற்படாததால் அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கொரியன் ஏர் நிறுவனம் பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுள்ளதுடன் மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அனைத்து வகையான விசாரணைகளுக்கும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு தேவையான உதவிகளை செய்து அவர்களுக்கு தேவையான தங்குமிடம், உணவு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.