பௌத்த பிக்குகளுடைய நடவடிக்கைகளுக்கு அரசாங்கத்தை சேர்ந்த இனவாதிகள் துணை: துரைராசா ரவிகரன்
பௌத்த பிக்குகளுடைய நடவடிக்கைகளுக்கு துணை போகின்றவர்களாக தான் அரசாங்கத்தை சேர்ந்த இனவாதிகள் இருக்கின்றார்கள் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்( Thurairajah Raviharan)தெரிவித்துள்ளார்.
குருந்தூர்மலை பகுதியில் அமைந்துள்ள ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் நேற்றையதினம் (18.06.2024) வழிபாட்டினை மேற்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
குருந்தூர் மலை விவகாரம்
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
"குருந்தூர் மலை ஆதி சிவன் ஐயனார் ஆலயத்தில் மக்கள் தொடர்ச்சியாக வழிபாட்டில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்தவகையில், ஏற்கனவே பல தடவை வழிபட்டு வந்திருந்தாலும் இன்றும் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தோம்.
குருந்தூர்மலை விடயம் ஏற்கனவே பூதாகரமாக வெளிப்படுத்தப்பட்டிருந்தது.
எங்களுடைய வரலாறுகள் இங்கே இருக்க கூடியதாக தொல்லியல் திணைக்களமும், பௌத்த பிக்குமாரும் சேர்ந்து தொல்லியல் தொடர்பான நடவடிக்கைகளை செய்கின்றோம் என்று கூறி பௌத்த விகாரையை அமைத்திருந்தார்கள்.
இதனை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றதால் அது நிறுத்தப்பட்டது.
எமக்கு வழிபடலாம் என தீர்ப்புக்கள் கூறினாலும் அதற்குரிய முடிவுகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. இதற்குரிய தீர்வானது மிக விரைவில் கிடைக்க வேண்டும்.
அத்துமீறி விகாரை அமைத்ததற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கை" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |