கனடாவில் ஆயுள் தண்டனை கைதிக்கு மேலும் 9 ஆண்டுகள் சிறை
கனடாவில் உள்ள கிராவன்ஹர்ஸ்ட் சிறைச்சாலையில் சக கைதியைக் கொலை செய்த வழக்கில், ஏற்கனவே ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் கைதிக்கு மேலும் 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
58 வயதான டெவோன் சாண்டர்ஸ் என்ற நபருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஒன்ராறியோ மாகாணம், முஸ்கோகா பகுதியில் உள்ள மீடியம்-செக்யூரிட்டி பீவர் கிரீக் சிறைச்சாலையில், கடந்த 2022 டிசம்பர் 18 அன்று சக கைதியான 30 வயது லெஸ்லி மா என்பவரைக் கத்தியால் குத்திக் கொன்றார். இந்த வழக்கை விசாரித்த நியூமார்க்கெட் நீதிமன்றம், சாண்டர்ஸுக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இந்த தண்டனையானது அவர் ஏற்கனவே அனுபவித்து வரும் ஆயுள் தண்டனையுடன் சேர்த்து வழங்கப்படும். தான் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவே தற்காப்புக்காகத் தாக்க நேர்ந்ததாக சாண்டர்ஸ் தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால், தற்காப்புக்கான எந்தவொரு நியாயமான காரணமும் இல்லை என்று நீதிபதி ஹோவர்ட் லீபோவிச் தெரிவித்தார்.
சாண்டர்ஸ் மீது திட்டமிட்ட கொலைக் குற்றம் சாட்டப்பட்டிருந்தாலும், ஜூன் மாதம் நடைபெற்ற விசாரணையின் முடிவில் பிரேஸ்பிரிட்ஜ் நடுவர் மன்றம் அவரைக் கொலைக் குற்றத்திலிருந்து விடுவித்து, குறைவான குற்றமான சட்டவிரோத படுகொலை குற்றவாளியாகக் கண்டறிந்தது.
சாண்டர்ஸ் ஏற்கனவே கடந்த 2008 ஆம் ஆண்டில் தனது முன்னாள் காதலி ஷெர்னெல் பியர்ஸ் என்பவரைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, 2015-ல் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை பெற்று வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் தான் அந்தக் கொலையைச் செய்யவில்லை என்று அவர் தொடர்ந்து மறுத்து வருகிறார்.