லண்டனில் காந்தி சிலை சேதம் ; வலுக்கும் கண்டனம்
எதிர்வரும் ஒக்டோபர் 2 ஆம் திகதி வருடாந்த காந்தி ஜெயந்தி கொண்டாட்டங்கள் நடைபெறுவதற்கு சில நாட்களே உள்ள நிலையில் லண்டனில் உள்ள டெவிஸ்டோக் சதுக்கத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சிலை நேற்று (29) சேதப்படுத்தப்பட்டதற்கு இந்திய உயர் ஸ்தானிகராலயம் கடும் கண்டனம் வௌியிட்டுள்ளது.
தேசப்பிதா தியான தோரணையில் அமர்ந்திருக்கும் வகையில் சித்தரிக்கப்பட்ட சின்னமான அந்த சிலையின் அடிப்பகுதியில் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாசவேலை
"லண்டனில் உள்ளடெவிஸ்டோக் சதுக்கத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலையை சேதப்படுத்திய நாசகர செயலை வன்மையாக கண்டிப்பதாக லண்டனில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளது.
"இது வெறும் நாசவேலை மட்டுமல்ல, சர்வதேச அகிம்சை தினத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, அகிம்சை கருத்து மற்றும் மகாத்மாவின் மரபு மீதான வன்முறைத் தாக்குதலாகும்.
இது தொடர்பில் உள்ளூர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளோம். சிலையை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவருவதற்கும் நடவடிக்கை எடுத்து வருவதாக லண்டனில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையால் சர்வதேச அகிம்சை தினமாக நியமிக்கப்பட்ட காந்தி ஜெயந்தி, ஆண்டுதோறும் ஒக்டோபர் 2 ஆம் திகதி லண்டனில் உள்ள நினைவுச்சின்னத்தில் மலர் அஞ்சலி மற்றும் அவருக்கு விருப்பமான பாடல்கள் இசைக்கப்பட்டு நினைவுகூரப்படுகிறது.
இந்தியா லீக்கின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட இந்த வெண்கல சிலை, அருகிலுள்ள லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் மகாத்மா காந்தி சட்ட மாணவராக இருந்த நாட்களைக் குறிக்கும் வகையில் 1968 ஆம் ஆண்டு சதுக்கத்தில் திறக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் பெருநகர பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.