லண்டனில் நடந்த துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த இந்திய வம்சாவளி சிறுமி கவலைக்கிடம்!
லண்டனில் நடந்த துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிறுமி கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியா தலைநகர் லண்டனில் கிங்ஸ்லேண்ட் ஹை ஸ்ட்ரீட் பகுதியில் கடந்த புதன்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் துப்பாக்கி சூடு நடத்தினர்.
இந்த சம்பவத்தின்போது அந்த பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் உணவருந்திக் கொண்டிருந்த 9 வயது சிறுமி உள்பட 4 பேர் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன.
துப்பாக்கி சூடு நடத்திய நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில், இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார், படுகாயமடைந்த 4 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுமியின் பெயர் லிசெல் மரியா என்றும், அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
அவர் கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த அஜீஷ்-வினயா தம்பதியின் மகள் என்பது தெரியவந்துள்ளது.
இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக லண்டன் நகர போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.