3 வயது சிறுவனை கொலை செய்ய முயன்றதாக பெண் கைது
கனடாவின் லண்டன் நகரின் கிழக்குப் பகுதியில் நடந்த கொலைமுயற்சி சம்பவம் தொடர்பாக, 29 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், அந்தப் பெண் மீது மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
லண்டன் காவல்துறையின் முக்கிய குற்றவியல் பிரிவு இந்த தகவலை தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை மாலை 7:15 மணியளவில், Marconi Boulevard மற்றும் Marconi Court அருகே உள்ள ஒரு வீட்டிலிருந்து 911 அவசர அழைப்பு வந்ததையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அங்கு மேற்கொண்ட விசாரணையில், குறித்த பெண், 3 வயது சிறுவனுக்கு உயிருக்கு ஆபத்தான காயங்கள் ஏற்படுத்த முயன்றதாக போலீசார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் குறித்த இடத்திலிருந்து சிறிது தூரத்தில் இருந்தபோதே போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
சம்பவத்தின்போது சிறுவனை மருத்துவ உதவிச் சேவைகள் பரிசோதித்தபோதும், அவருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும் வகையில் உடலுறுப்பு காயம் எதுவும் ஏற்படவில்லை என போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, லண்டனில் வசிக்கும் 29 வயதுடைய பெண் ஒருவர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு சுமத்தி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குற்றச்சாட்டில் உள்ள சந்தேகநபரும், பாதிக்கப்பட்ட சிறுவனும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் எனவும், பாதிக்கப்பட்டவரை அடையாளம் காண இயலாமல் இருக்க, சந்தேகநபரின் பெயர் வெளியிடப்படுவதில்லை எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் பொதுமக்களின் பாதுகாப்புக்கு ஆபத்தாக இல்லையெனவும், சந்தேகநபர் தற்போது காவலில் உள்ளார் என்றும், இன்று லண்டன் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.