பெற்றோர் உட்பட நால்வர் மீது நபர் ஒருவரின் கொலைவெறி: வெளிவரும் அதிர்ச்சி சம்பவம்
அமெரிக்காவின் மைனே மாகாணத்தில் பெற்றோர் உட்பட நால்வரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த நபர், மூவரை காயப்படுத்தியுள்ளார் என்ற தகவல் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மைனே மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த இச்சம்பவம் தொடர்பில் 34 வயதான ஜோசப் ஈட்டன் என அடையாளம் காணப்பட்ட நிலையில், தற்போது பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், தாக்குதலில் ஈடுபட்ட நபர் சிந்தியா மற்றும் டேவிட் ஈட்டனின் மகன் என்பதும் அவர்கள் பௌடின் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் சுட்டுக் கொல்லப்பட்டனர் எனவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, கைது செய்யப்பட்ட ஜோசப் ஈட்டன் தமது பெற்றோரையும் அவர்களின் நண்பர்கள் இருவரையும் கொலை செய்துள்ளதை ஒப்புக்கொண்டுள்ளார். இந்த நால்வரின் சடலங்களும் ராபர்ட் ஈகர் என்பவரது குடியிருப்பில் இருந்தே பொலிசார் மீட்டுள்ளனர்.
மேலும், தாக்குதல் சம்பவத்திற்கு முன்னர் ஜோசப் ஈட்டன் காப்பகம் ஒன்றில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிகிச்சையில் இருந்து வந்துள்ளார் எனவும் கூறப்படுகிரது. ஜோசப் ஈட்டன் எந்த வகையான ஆயுதத்தை பயன்படுத்தி தாக்குதல் முன்னெடுத்தார் என்ற தகவலை பொலிசார் இதுவரை வெளியிடவில்லை.
இந்த விவகாரம் தொடர்பில் ஜோசப் செவ்வாயன்று கைது செய்யப்பட்டார் மற்றும் நான்கு கொலைக் குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது. அவர் இந்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தாக்குதல் முன்னெடுக்கப்படும் முன்னர் பேஸ்புக் பக்கத்தில் காணோளி ஒன்றை வெளியிட்ட ஜோசப், அதில் தம்மை அனைவரும் மன்னிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.