ஐக்கிய அரபு இராச்சியத்தில் பாரிய வாகன விபத்து; 14 பேர் பலி ;பலர் காயம்
ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) இடம்பெற்ற பாரிய வாகன விபத்தும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ விபத்தும் காரணமாக 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 30 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புஜைரா நுழைவுப் பகுதிக்கு அருகிலுள்ள ஷேக் கலீஃபா பின் சயீத் வீதியில் நள்ளிரவு வேளையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சரக்குகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தியின் சாரதி கட்டுப்பாட்டை இழந்து மற்றுமொரு வாகனத்துடன் மோதியதில் அந்த வாகனம் கவிழ்ந்துள்ளது.

பல வாகனங்களுடனும் பாரவூர்தி மோதி கவிழ்ந்துள்ளது
வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்களுடனும் பாரவூர்தி மோதியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் சுமார் 23 வாகனங்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தைத் தொடர்ந்து பாரவூர்தியில் ஏற்பட்ட தீ, சேதமடைந்த ஏனைய வாகனங்களுக்கும் பரவியுள்ளது. உயிரிழந்தவர்களில் ஐக்கிய அரபு இராச்சியப் பிரஜைகளும் வெளிநாட்டவர்களும் அடங்குவதாகவும், சிலரின் உடலங்களை அடையாளம் காண்பதற்காக டிஎன்ஏ பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
தீயைக் கட்டுப்படுத்துதல், காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு அனுப்புதல் மற்றும் சம்பவப் பகுதியில் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக அவசரகால மீட்புக் குழுவினர், சிவில் பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
இந் நிலையில் அண்மைக் காலங்களில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்ற மிக மோசமான வீதி விபத்தாக இது கருதப்படுகிறது.