டொராண்டோவில் பேருந்துக்காக காத்திருந்த பெண்ணை துன்புறுத்திய நபர் கைது
கனடாவின் டொராண்டோ நகரின் எட்டோபிகோ பகுதியில் பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கிப்லிங் அவென்யூ மற்றும் லேக் ஷோர் புலவர்ட் வெஸ்ட் சந்திப்புப் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விசாரணையில், பாதிக்கப்பட்ட பெண் ரீ.ரீ.சீ பேருந்துக்காக காத்திருந்த போது, குற்றம்சாட்டப்பட்ட நபர் அவரை அணுகி பாலியல் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் தாக்குதல்
அந்த நேரத்தில் அங்கிருந்த ஒரு பொதுமகன் தலையிட்டு உதவியதால், சந்தேகநபர் சாலையை கடந்துவிட்டு அந்தப் பகுதியை விட்டு வெளியேறியதாக போலீசார் கூறினர்.
விசாரணையின் மூலம், 38 வயதுடைய டெரன்ஸ் ஜேம்ஸ் நூனன் (Terrance James Noonan) என்பவரை சந்தேகநபராக போலீசார் அடையாளம் கண்டனர்.
அவர்மீது பாலியல் தாக்குதல் மற்றும் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியமை ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், இதே நபரால் பாதிக்கப்பட்ட மற்ற நபர்கள் இருக்கக்கூடும் என போலீசார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், குற்றம்சாட்டப்பட்ட நபரின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் போலீசாரையோ அல்லது குற்றத் தகவல் சேவை அமைப்பையோ தொடர்பு கொண்டு அடையாளம் வெளிப்படுத்தாமல் தகவல்களை வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.