சாலையில் பொம்மைக் காரில் பயணித்த கனேடியர்: அடுத்து நடந்த சம்பவம்
கனடாவில், சாலையில் சிறுபிள்ளைகளுக்கான பொம்மைக் கார் ஒன்றை ஓட்டிச் சென்ற நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ள நிலையில், பொம்மைக் கார் ஓட்டுவது தவறா என இணையவாசிகள் திகைப்படைந்துள்ளார்கள்.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள பிரின்ஸ் ஜார்ஜ் நகரில், கேஸ்பர் லிங்கன் (Kasper Lincoln) என்பவர், சிறுபிள்ளைகளுக்கான Barbie Jeep வகை பொம்மைக் கார் ஒன்றை ஓட்டிவருவதை ஆர்வமுடன் பார்த்துகொண்டிருந்திருக்கிறார்கள் பொதுமக்கள் சிலர்.
சிறிது நேரத்தில் பொலிஸ் கார் ஒன்று வந்து நிற்க, அதிலிருந்து இறங்கிய பொலிசார் லிங்கனைக் கைது செய்ய, அவரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் அவர் எதற்காக கைது செய்யப்படுகிறார் என்பது புரியாமல் திகைப்படைந்துள்ளார்கள்.
பொம்மைக் கார் ஓட்டுவது தவறா என அதே சாலையில் பயணித்துக்கொண்டிருந்த சிலர் கேள்வி எழுப்ப, லிங்கன் கைது செய்யப்படும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவ, இணையமும் திகைப்படைந்துள்ளது.
ஆனால், எந்த வாகனத்தை சாலையில் ஓட்டினாலும், அது பொம்மைக் காராகவே இருந்தாலும், அதற்கு உரிமம் வேண்டும், காப்பீடு இல்லாத வாகனங்களை சாலையில் இயக்குவது குற்றம் என்கிறார்கள் அதிகாரிகள்.
அத்துடன், தான் மது அருந்தியிருந்ததும் தான் கைது செய்யப்பட காரணம் என்று கூறும் லிங்கன், தயவு செய்து மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள் என அட்வைஸும் கொடுக்கிறார்.
இன்னொரு பக்கம் லிங்கன் குறித்த மீம்கள் இணையத்தில் வைரலாகிவருவதால் அவர் மகிழ்ச்சி அடைந்துள்ளதையும் மறுப்பதற்கில்லை!