மொண்ட்ரியாலில் கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டு 67 வயது முதியவர் உயிரிழப்பு
மொண்ட்ரியாலின் தென் கரைப் பகுதியான புரோசார்ட் நகரில் உள்ள வீடொன்றில், கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டதில் 67 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
புரோசார்ட் நகரின் பியூலாக் வீதியில் கூரிய ஆயுதத்துடன் நபர் ஒருவர் நடமாடுவதாக இரவு 8:00 மணியளவில் லோங்குவில் காவல்துறையினருக்கு அவசர அழைப்பு (911) கிடைத்துள்ளது.

இதனையடுத்துச் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அங்கிருந்த 44 வயது நபரை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.
எனினும், காவல்துறையினர் அங்கு சென்றடைந்த போதே 67 வயது நபர் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார்.
பரிசோதனையின் பின்னர் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
உயிரிழந்த முதியவரும், கைது செய்யப்பட்ட 44 வயது நபரும் ஒரே வீட்டில் அறைத் தோழர்களாக தங்கியிருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் இடம்பெற்ற பகுதிக்குக் காவல்துறையினர் பாதுகாப்பு வேலி அமைத்துள்ளதோடு, இக்கொலைக்கான பின்னணி மற்றும் சூழ்நிலைகள் குறித்துத் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.