ஒன்டாரியோவில் ரயில் மோதி ஒருவர் பலி
கனடா ஒன்றாரியோ பிரைட்டனில் ரயில் மோதி ஒருவர் உயிரிழந்ததாக மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது.
மொன்க் வீதிக்கு அருகிலுள்ள ஒன்டாரியோ வீதியில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் பாதசாரியொருவர் ரயிலில் மோதுண்டதாக தகவல் கிடைக்கப் பெற்றதாக ஒன்டாரியோ மாகாணக் காவல்துறையின் (Ontario Provincial Police - OPP) தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்ற போது, பாதசாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தின் காரணங்கள் இதுவரை தெளிவாகவில்லை என்றும் OPP தெரிவித்துள்ளது. விபத்து தொடர்பான விசாரணையின்போது, மொன்க் வீதியிலிருந்து பட்ட்லர் வீதிவரை ஒன்டாரியோ வீதி மூடப்பட்டது.
சுமார் மூன்று மணிநேர விசாரணைக்குப் பிறகு, வீதி 5 மணிக்கு சாலை மீண்டும் திறக்கப்பட்டது.
இந்த விபத்தில் சாட்சியம் உள்ளவர்கள், குறிப்பாக டாஷ்கேம் (Dashcam) வீடியோவுள்ளவர்கள் 1-888-310-1122 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவரின் அடையாளம் மற்றும் மேலதிக விவரங்கள் அதிகாரப்பூர்வமாக இதுவரை வெளியிடப்படவில்லை.