கனடாவில் வீதிப் புனரமைப்பின் போது ஏற்பட்ட விபரீதம்
கனடாவின் நோவா ஸ்கோடியா மாகாணம், லுனென்பர்க் கவுண்டியில் வீதிப் புனரமைப்புப் பணி நடந்து கொண்டிருந்த பகுதிக்குள் லொறி ஒன்று அதிவேகமாகப் புகுந்ததால் ஏற்பட்ட தொடர் வாகன விபத்தில், ஒட்டாவாவைச் சேர்ந்த 65 வயது முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மேலும், ஒரு பெண் உயிராபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிளியர்லாண்ட் பகுதியில் உள்ள 103ஆம் இலக்க நெடுஞ்சாலையிலேயே இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

விபத்து நடந்த பகுதியில் ஒரு வழிப் போக்குவரத்துக்காக தற்காலிக வீதிச் சமிக்ஞை விளக்குகள் பொருத்தப்பட்டு, வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன.
அப்போது, மேற்கு நோக்கி அதிவேகமாக வந்த 'டாட்ஜ் ராம்' ரக லொறி ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து வீதிப் புனரமைப்புப் பகுதிக்குள் புகுந்தது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த 'டொயோட்டா RAV4' ரக காரின் மீது அந்த லொறி பலமாக மோதியதுடன், கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த 'ஜீப் செரோக்கி' (Jeep Cherokee) காரின் மீதும் மோதி நின்றது.
இச்சம்பவத்தில் நான்காவதாக இருந்த மற்றொரு வாகனமும் லேசான சேதத்திற்குள்ளானது.
இவ்விபத்தில், லொறி முதலாவதாக மோதிய டொயோட்டா காரை ஓட்டி வந்த ஒட்டாவாவைச் சேர்ந்த 65 வயது முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.அவருடன் பயணித்த 64 வயதுடைய பெண்மணி உயிராபத்தான காயங்களுக்குள்ளான நிலையில், ஹெலிகொப்டர் மூலம் அவசர அவசரமாக விசேட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
விபத்து நடந்த சமயத்தில் அந்தப் பகுதியில் தொழிலாளர்கள் யாரும் பணியில் ஈடுபட்டிருக்கவில்லை என்றும், இதனால் பெரும் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து நடந்த பகுதியில் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
விபத்தை ஏற்படுத்திய லொறியைச் செலுத்திய 26 வயது வாலிபர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படுமா என்பது குறித்து பொலிஸார் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.