மனைவியுடன் வாய்த்தகராறு - வீட்டை விட்டு சென்ற கணவர் மர்மமான முறையில் மரணம்
பொலன்னறுவை, கல்தம்பறாவ, நிஸ்ஸங்கமல்லபுர பகுதியில் 31 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் ஈஸ்வரகே தொன் தில்ஷான் மதுஷங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேற்று பிற்பகல் தனது கணவர் நண்பர்களுடன் மது அருந்திவிட்டு பின்னர் வீட்டிற்கு அருகில் வந்து தன்னுடன் வாய்த்தகராறில் ஈடுபட்டு வீட்டைவிட்டுச் சென்றதாக உயிரிழந்தவரின் மனைவி குறிப்பிட்டுள்ளார்.
மர்மமான முறையில் மரணம்
இரவு வேளையாகியும் வீட்டிற்கு வராத கணவன் இன்று காலை வீட்டிலிருந்து சுமார் 100 மீட்டர் தூரத்திலுள்ள பிரதான வீதியில் விழுந்து கிடந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

அப்போது காயங்களுடன் இருந்த அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக மனைவி குறிப்பிட்டுள்ளார்.
மது அருந்திய போது இடம்பெற்ற கொலையா அல்லது வீதியில் விழுந்து கிடந்தபோது ஏதேனும் வாகன விபத்து காரணமாக இடம்பெற்ற மரணமா என்பது தொடர்பில் பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. சம்பவம் குறித்து பொலன்னறுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.