துப்பாக்கி முனையில் நடந்த சம்பவம்: சிக்கிய நால்வர்
வடக்கு யோர்க் பகுதியில் கடந்த வார இறுதியில் இளைஞர் ஒருவர் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் நால்வர் கைதாகியுள்ளனர்.
கடந்த ஜூன் 26ம் திகதி யோங் ஸ்ட்ரீட் மற்றும் க்ளெண்டோரா அவென்யூ பகுதியில் நடந்து சென்ற 23 வயது இளைஞர் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டார்.
சம்பவத்தின் போது அவருகே வந்து நின்ற காரில் இருந்தவர் பேச்சுக்கொடுக்க, திடீரென்று துப்பாக்கியை காட்டி மிரட்டி இளைஞரை கடத்தியுள்ளனர்.
வலுக்கட்டாயமாக அழைத்து செல்லப்பட்ட அந்த இளைஞரின் கைகளை கட்டி வைத்துள்ளனர். மேலும், இளைஞரின் நண்பர்கள் சிலரை தொடர்பு கொண்டு மிரட்டி பணம் கேட்டுள்ளனர்.
ஆனால் அவர்கள் பணம் அளித்தார்களா என்பது தொடர்பில் விசாரிக்கப்படும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
கடத்தப்பட்ட இளைஞரை பொலிசார் மீட்டுள்ளதுடன், தற்போது இந்த சம்பவத்தில் தொடர்புடைய நால்வரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் நால்வரும் ஹாமில்டன் மற்றும் ரொறன்ரோ பகுதியில் வசிப்பவர்கள் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கைதான நால்வர் மீதும் 46 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. இவர்கள் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் பொலிசாருக்கு உதவ கேட்டுள்ளனர்.