கலிபோர்னியாவில் 10 நாட்களாக காட்டுக்குள் சிக்கி தவித்தவர் மீட்பு
3 மணி நேரத்தில் திரும்பிவிடுவேன் என்று கூறிவிட்டு மலை ஏறிச்சென்றவர், 10 நாட்களாக திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் வழங்கிய தகவலின்பேரில் பொலிசார் தீவிர தேடுதலில் ஈடுபட்ட நிலையில், முற்றிலும் மாறிய மனிதனாக அந்நபர் மீட்கப்பட்டுள்ளார்.
வடக்கு கலிபோர்னியாவைச் சேர்ந்தவர் மெக்லீஷ் . இவர் கலிபோர்னியா க்ரீக் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்திருக்கிறார். இவரின் பொழுதுபோக்கு மலை ஏறுவது.
காட்டுத்தீயால் மறைந்த பாதை
இந்நிலையில் இவர் வசிக்கும் வீட்டின் அருகில் சாண்டா குரூஸ் மலை இருப்பதால், அங்கு அடிக்கடி ஏறி வந்திருக்கிறார். இதனால் ஒவ்வொரு பாதையையும் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்.
‘சாண்டா குரூஸ் மலையின் அனைத்து வழித்தடங்களும் பாதைகளும் நமக்கு நன்கு தெரியும்’ என நினைத்துக்கொண்டு, மெக்லீஷ் தலையில் தொப்பி, காலில் பூட்ஸ் மற்றும் பேண்ட் மட்டுமே அணிந்துக்கொண்டு, “மூன்று மணிநேரத்தில் வந்துவிடுகிறேன்” என்று குடும்பத்தினரிடம் சொல்லிவிட்டு மலை ஏறியுள்ளார்.
ஆனால் எதிர்பாரா விதமாக ஏற்பட்ட காட்டு தீயினால் மரங்கள் கருகி காட்டின் பாதையானது மறைந்துள்ளது. அதனால், காட்டுக்குள் சென்ற மெக்லீஷ் திரும்பி வருவதற்கான பாதையை அறியமுடியாமல் திணறியிருக்கிறார். அங்கு கிடைத்த காட்டு பெர்ரிகளையும், நீரூற்றிலிருந்து தண்ணீரையும் குடித்து உயிர் பிழைத்து இருக்கிறார்.
இந்நிலையில் திரும்பி வருவதாக கூறி சென்ற மெக்லீஷ் சில நாட்களாகியும் வராததால் கவலைக்கொண்ட குடும்பத்தினர் வழங்கிய தகவலை அடுத்து உடனடியாக காவலர்களும் மெக்லீஷின் குடும்பத்தினரும் இணைந்து காட்டிற்குள் மெக்லீஷை தேடிச் சென்றுள்ளனர். அப்போது காட்டின் நடுப்பகுதியிலிருந்து “காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்...” என்று மெக்லீஷின் குரல் கேட்டுள்ளது.
எனினும் அவர் எங்கு இருக்கிறார் என்ற சரியான திசை தெரியாததால் அவரை தேடி சென்றவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்துள்ளது. கிட்டதட்ட பத்து நாட்கள் கழிந்த நிலையில் நீண்ட தேடுதலின் முடிவில், மெக்லீஷ் சாண்டா குரூஸ் கவுண்டியில் எம்பயர் கிரேடு சலைக்கும், பிக் பேசின் நெடுஞ்சாலைக்கும் இடையே இருந்த ரெட்வுட் மரங்களுக்கு இடையே மெக்லீஷை பொலிஸார் கண்டு பிடித்தனர்.
இந்நிலையில் “இனி என் வாழ்க்கையில் காட்டு பக்கமே செல்லமாட்டேன்” என அவர் கூறியதாக தெரிவிக்கப்படும் நிலையில், அவர் திரும்பி வந்ததையிட்டு குடும்பத்தினர் மகிச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.