சிவலிங்கத்தை அவமதித்த மணிரத்னம், த்ரிஷா; இந்து அமைப்புகள் போர்க்கொடி!
நடிகை த்ரிஷா காலணி அணிந்து நந்தி சிலை அருகே நடந்து சென்றதால் அவரைக் கைது செய்ய வேண்டும் என இந்து அமைப்புகள் புகார் அளித்துள்ளன. அமரர் கல்கியின் வரலாற்றுப் புதினமான பொன்னியின் செல்வன் நாவலை, இயக்குநர் மணிரத்னம் திரைப்படமாக எடுத்து வருகிறார்.
இரண்டு பாகங்களாக உருவாகிவரும் இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இந்நிலையில் ’பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து முடிந்த நிலையில், தற்போது மத்தியப் பிரதேசத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
’டாட்டியா’ மாவட்டத்தின் ஓர்ச்சா, குவாலியர் கோட்டைகளை அடுத்து இந்தோர் மாவட்டத்தின் ஹரிகேஷ்வரிலும் நடைபெற்று வருகிறது. அங்குள்ள நர்மதா நதிக் கரையிலுள்ள ராணி அகில்யா பாய் கோட்டை அரண்மனை, சிவன் கோயிலில் நடிகை த்ரிஷா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
அங்குள்ள கரைகளில் பல சிவலிங்கங்கள், நந்தியுடன் அமைந்துள்ளன. கடந்த 1767ஆம் ஆண்டில் ஆண்டராணி அகில்யா பாயால் அமைக்கப்பட்ட இவை இந்துக்களால் புனிதமாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில் அக்கரையில் நேற்று (செப்.03) ஒரு படகில் த்ரிஷா வருவது போன்ற காட்சி படமாக்கப்பட்டதில், கரையில் வந்திறங்கிய த்ரிஷா, தரையிலிருந்த நந்தி, சிவலிங்கத்திற்கு இடையே காலணி அணிந்து நடந்து சென்றார்.
இதனால் இந்துக்களால் புனிதமாகப் பார்க்கப்படும் சிவலிங்கம் அவமதிக்கப்பட்டதாகவும், த்ரிஷாவையும், இயக்குநர் மணிரத்னத்தையும் உடனே கைது செய்ய வேண்டும் என ஹரிகேஷ்வரின் இந்து அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.
மேலும் இதுதொடர்பாக ஹரிகேஷ்வர் பொலிஸ் நிலையத்தில் இந்து அமைப்புகள் புகார் அளித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.