கனடாவின் ஓர் மாகாணத்தில் சமூக ஊடகங்களுக்குத் தடை
கனடாவின் மானிட்டோபா மாகாணத்தில் சிறுவர்கள் சமூக ஊடகங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) சாட்போட்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யப் போவதாக அந்த மாகாண முதலமைச்சர் வப் கினியூ அதிரடியாக அறிவித்துள்ளார்.
சிறுவர்களின் மனநலனைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்கள் சிறுவர்களின் மூளை வளர்ச்சியைப் பாதிப்பதோடு, பதற்றம், மனச்சோர்வு மற்றும் ஆள் கடத்தல் போன்ற ஆபத்துகளுக்கும் வழிவகுப்பதாகக் கவலை வெளியிட்டார்.

தொழில்நுட்ப நிறுவனங்கள் மனித உளவியலைப் பயன்படுத்தி சிறுவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இத்தளங்களை வடிவமைத்துள்ளதால், அவர்களுக்கு 'திரை நேரத்திலிருந்து' (Screen time) விடுதலை அளித்து, ஒரு குழந்தையாகச் சுதந்திரமாக வளர வழிவகை செய்ய வேண்டியது அரசின் கடமை என்றும் அவர் வலியுறுத்தினார்.
அவுஸ்திரேலியா ஏற்கனவே இத்தகைய தடையைக் கொண்டுவந்துள்ள நிலையில், கனடாவில் இம்முயற்சியை முன்னெடுக்கும் முதல் மாகாணமாக மானிட்டோபா திகழவுள்ளது.
இந்தத் தடைக்கான வயது வரம்பு மற்றும் நடைமுறைப்படுத்தப்படும் விதம் குறித்த மேலதிக விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.