ஈரான் முற்றுகை தொடர்பில் ட்ரம்ப்பின் புதிய அறிவிப்பு!
ஈரானுடன் ஒரு முறையான ஒப்பந்தம் எட்டப்படும் வரை, ஈரான் துறைமுகங்கள் மீதான கடல்சார் முற்றுகை நீக்கப்படாது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது 'ட்ரூத் சோஷியல்” தளத்தில் , இந்த முற்றுகை ஈரானை பொருளாதார ரீதியாகப் பெரிதும் பாதித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஈரானுடன் ஒரு இறுதி 'ஒப்பந்தம்' ஏற்படும் வரை முற்றுகை முழுமையாக அமுலில் இருக்கும் என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.

முற்றுகை முழுமையாக அமுலில் இருக்கும்
இந்த முற்றுகையினால் ஈரான் ஒரு நாளைக்கு 500 மில்லியன் டொலர்களை இழந்து வருவதாகவும், இது குறுகிய காலத்திற்குக் கூட தாங்கிக்கொள்ள முடியாத ஒரு தொகை என்றும் அவர் வாதிட்டுள்ளார்.
ஏப்ரல் 13 முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள இந்த முற்றுகை, ஈரான் தனது அணுசக்தி திட்டம் மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தி விவகாரங்களில் அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு உடன்பட வைக்கும் ஒரு அழுத்த உத்தியாகப் பார்க்கப்படுகிறது.
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடுவதாக ஈரான் எச்சரித்துள்ள நிலையிலும், ட்ரம்ப் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்.
இந்தநிலையில், ஈரான் துறைமுகங்களுக்குள் நுழையும் மற்றும் வெளியேறும் கப்பல்களைக் கட்டுப்படுத்தும் பணியில் அமெரிக்கக் கடற்படையின் மத்திய கட்டளையகம் ஈடுபட்டுள்ளது.