கனடிய பிரதமரின் வெளிநாட்டு விஜயங்கள் நிறைவு
வெளிநாடுகளில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் மேற்கொண்ட ஒன்பது நாள் உலகச் சுற்றுப்பயணத்தை கனடா பிரதமர் மார்க் கார்னி நிறைவு செய்து வருகிறார்.
பல நாடுகளை உள்ளடக்கிய இந்தப் பயணம், அரசியல் கட்சிகள் கடந்து சில விமர்சனங்களையும் ஈர்த்துள்ளது.
உலக பொருளாதார மன்றம் (World Economic Forum) நடைபெறும் சுவிட்சர்லாந்தின் டாவோஸில் தற்போது இருக்கும் கார்னி, முதலீட்டாளர்களை சந்திப்பதுடன், பிற தேசிய தலைவர்களுடன் மதிய உணவு சந்திப்பிலும் பங்கேற்க உள்ளார்.

இதனைத் தொடர்ந்து இன்று மாலை அவர் கனடாவின் ஒட்டாவாவிற்கு திரும்புகிறார். இந்தச் சுற்றுப்பயணம் பீஜிங்கில் தொடங்கியது.
அங்கு சீனாவுடன் ஒரு முக்கிய வர்த்தக ஒப்பந்தத்தை கார்னி உறுதி செய்தார்.
அதன்படி, சீன மின்சார வாகனங்களுக்கு (EVs) சந்தை அணுகலை வழங்குவதற்குப் பதிலாக, கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் விவசாயப் பொருட்களுக்கான சுங்க வரிகளை சீனா குறைக்க ஒப்புக்கொண்டது.
கடந்த ஆண்டு பதவியேற்றதற்குப் பின்னர் கார்னி அரசு சீனாவுடன் நீண்ட காலமாக நீடித்த வர்த்தக முரண்பாடுகளைத் தீர்க்க நடவடிக்கை எடுத்ததாக சர்வதேச வர்த்தக அமைச்சர் மணிந்தர் சித்து, டாவோஸில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
ஜூன் மாதத்தில் தனது சீன இணை அமைச்சரை முதன்முறையாக சந்தித்தபோது, இரு நாடுகளுக்கிடையிலான கூட்டு பொருளாதார மற்றும் வர்த்தக ஆணையம் (Joint Economic and Trade Commission) எட்டு ஆண்டுகளாக செயலற்ற நிலையில் இருந்ததாகவும், பொருத்தமான உரையாடல் கூட நடக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.