மசாஜ் சிகிச்சையாளர் பாலியல் குற்றச்சாட்டில் கைது
கனடாவில் பதிவுசெய்யப்பட்ட மசாஜ் சிகிச்சையாளர் ஒருவரால் பாதிக்கப்பட்ட மற்றுமொரு பெண் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, அவர் மீது மேலதிக பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
ஐமன் அல்காசெம் என்பவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட புதிய முறைப்பாடுகள் குறித்து கடந்த ஒக்டோபர் மாதம் விசாரணையை ஆரம்பித்ததாக ஹால்டன் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2025 ஆம் ஆண்டு மே மாதம் மில்டன் நகரிலுள்ள 'மசாஜ் அடிக்ட்' நிலையத்தில் அல்காசெம் பணியாற்றியபோது, தன்னைப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகப் பெண்ணொருவர் முறைப்பாடளித்திருந்தார்.

இதனையடுத்து, வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட அல்காசெம் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, 1130 ஸ்டீல்ஸ் அவென்யூவில் அமைந்துள்ள குறித்த நிலையத்தில் தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பெண் வாடிக்கையாளர் ஒருவர் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, 2025 ஜூன் மாதத்திலும் அல்காசெம் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இச்சம்பவம் தொடர்பில் ஒன்ராறியோ மசாஜ் சிகிச்சையாளர்கள் கல்லூரியும் விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில், இனிமேல் மசாஜ் சிகிச்சையில் ஈடுபடப் போவதில்லை எனவும் 'பதிவுசெய்யப்பட்ட மசாஜ் சிகிச்சையாளர்' என்ற பட்டத்தைப் பயன்படுத்தப் போவதில்லை எனவும் அல்காசெம் எழுத்துமூல உறுதிமொழி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.