அமெரிக்க அதிபர் ட்ரம்பின் செல்வாக்கில் பாரிய சரிவு!
அமெரிக்க மக்கள் மத்தியில் அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆதரவு விகிதம் (Approval rating) அவரது பதவிக் காலத்திலேயே மிகக் குறைந்த அளவான 33 சதவீதமாகச் சரிந்துள்ளது.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நடைபெறும் போர் நீண்ட காலம் நீடிக்கும் என்ற கவலையே, டொனால்ட் ட்ரம்பின் செல்வாக்கு அமெரிக்க மக்கள் மத்தியில் சரிந்து போயுள்ளமைக்கான காரணம் என்பது தெரியவந்துள்ளது.

ஈரான் மீதான தாக்குதல்
ரொய்ட்டர்ஸ்ஃஇப்சாஸ் (Reuters/Ipsos) கருத்துக்கணிப்பில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
நான்கு நாட்களால் நடைபெற்று நேற்று முடிவடைந்த இந்த கருத்துக்கணிப்பின்படி, ட்ரம்பின் செயல்பாட்டிற்கு 33வீத மக்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளதுடன் 64வீதமானோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 80வீத அமெரிக்கர்கள் (87வீத ஜனநாயகக் கட்சியினர் மற்றும் 71வீத குடியரசுக் கட்சியினர்) ஈரானுடனான அமெரிக்காவின் மோதல் நீண்ட காலத்திற்குத் தொடரும் என நம்புகின்றனர்.
சில வாரங்களில் முடிவடையும் என 16வீதமானோர் மட்டுமே நினைக்கின்றனர். ஈரான் மீதான தாக்குதல்களால் அமெரிக்கா உட்பட்ட உலகளாவிய எண்ணெய் விலையில் உயர்வும் ட்ரம்பின் சரிவுக்கான காரணமாகும்.
இந்தநிலையில் எதிர்வரும் நவம்பர் 3 நடைபெறும் இடைத்தேர்தலில் பிரதிநிதிகள் சபையில் தங்கள் பெரும்பான்மையைத் தக்கவைப்பது குறித்து குடியரசுக் கட்சியினருக்கு அச்சம் உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.