இங்கிலாந்தில் வணிக கட்டிட தொகுதியில் பாரிய தீ விபத்து
இங்கிலாந்தில் ஒரு பெரிய வணிக கட்டிட தொகுதியில் ஏற்பட்ட பயங்கரத் தீயை அணைக்க ஏராளமான தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
நேற்றையதினம் கெய்ர்பிலி (Caerphilly) (county) கவுண்டியில் உள்ள (Blackwood ) பிளாக்வுட் அருகே, பொன்ட்லான்ஃப்ரைத் (Pontllanfraith) பகுதியில் உள்ள வணிக கட்டிட தொகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து அப்பகுதிக்கு தீயணைப்புப் படையினர் அழைக்கப்பட்டனர்.

கடைகளுக்கு பாரிய சேதங்கள்
இந்த விபத்தை எதிர்கொள்ள ஏராளமான தீயணைப்பு வாகனங்கள் மற்றும் அவசரக்கால வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகவும், இன்று காலையிலும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெற்கு வேல்ஸ் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் கூறுகின்றனர்.
இந்நிலையில் பொதுமக்கள் தயவுசெய்து இந்தப் பகுதியைத் தவிர்க்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். இது தீயணைப்புப் படையினர் பாதுகாப்பாகப் பணியாற்றுவதையும், அவசரக்கால வாகனங்கள் தடையின்றி செல்வதையும் உறுதி செய்ய உதவும் என செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
அப்பகுதியில் அதிக அளவில் புகை மூட்டம் காணப்படுவதால், அருகில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடி வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை 6:30 மணியளவில் இந்தத் தீ விபத்தை கவனித்ததாக அந்தப் பகுதியைச் சேர்ந்த 32 வயதான ஜேம்ஸ் வில்கின்ஸ் என்பவர் தெரிவித்துள்ளார்.
குறித்த தீ விபத்தினால் பலரும் தொழிலை இழந்துள்ளதாகவும் கடைகளுக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுவதுடன் தீ ஏற்பட்டமைக்கான காரணம் வெளியாகவில்லை.