போலந்தின் பயங்கர தீவிபத்து; ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட கோழிகள் பலி
போலந்தின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கோழிப் பண்ணை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட கோழிகள் தீயில் கருகி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
தென்மேற்கு போலந்தில் உள்ள ஃபால்கோவிசே (Fałkowice) கிராமத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆயிரக்கணக்கான கோழிகள் அடைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

கோழிப் பண்ணையில் சுமார் 1.3 இலட்சம் கோழிகள்
உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்த தகவலின்படி, அந்தக் கோழிப் பண்ணையில் சுமார் 1.3 இலட்சம் கோழிகள் வளர்க்கப்பட்டு வந்தன. இதில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான கோழிகள் உயிரிழந்தன.
எனினும், சில ஊடகங்கள் இந்த எண்ணிக்கை 4 இலட்சம் வரை இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளன. தீயணைப்பு வீரர்கள் இந்தப் பெரும் தீயை முழுவதுமாக அணைக்க 10 மணி நேரம் போராட வேண்டியிருந்தது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை எவ்விதத் தகவலும் வெளியாகவில்லை. என்பதுடன் சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.