அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பாரிய தட்டுப்பாடு; சிக்கலைச் சமாளிக்க பைடன் அதிரடி நடவடிக்கை
அமெரிக்காவில் குழந்தைகளுக்கான பால்மாவுப் பாரிய பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், அதனை சமாளிக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe biden) தற்காப்பு உற்பத்திச் சட்டத்தைச் செயல்படுத்தியுள்ளார்.
அந்தச் சட்டம் பால்மாவைத் தயாரிப்பதற்கான மூலப்பொருள்கள் உற்பத்தியாளர்களுக்குக் கிடைக்க உதவுகிறது. அத்துடன் வெளிநாடுகளிலிருந்து பால்மாவைக் கொண்டுவர தற்காப்பு அமைச்சின் வர்த்தக விமானங்களைப் பயன்படுத்துமாறும் பைடன் உத்தரவிட்டுள்ளார்.
நுண்ணுயிர் தொற்று குறித்த புகார்கள் எழுந்ததால் அமெரிக்காவின் முதன்மை பால்மாவுத் தயாரிப்பு நிறுவனமான Abbott Laboratories அதன் தொழிற்சாலையொன்றை மூடியதனால் நாட்டில் பால்மாவுக்கான பற்றாக்குறை ஏற்பட்டது.
அதேசமயம் சில பெற்றோர் சொந்தப் பால்மாவைத் தயாரிக்க தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்குத் தேவைப்படும் சத்துகள் சொந்தமாக தயாரிக்கப்பட்ட கலவைகளில் இல்லாமல் இருக்கலாம் என்று குழந்தைநல மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
அத்துடன் குழந்தைகள் நோய்வாய்ப்படும் சாத்தியமிருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.