பிரான்சில் பெரும் காட்டுத்தீ; படகுகளில் தப்பியோடும் மக்கள்
மேற்கு பிரான்சில் உள்ள ஒரு தீபகற்பத்தை காலி செய்ய அதிகாரிகள் பொது மக்களுக்கு உத்தரவிட்டுள்ள நிலையில் மக்கள் படகுகளில் தப்பியோடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால், வெள்ளிக்கிழமையன்று (24) நூற்றுக்கணக்கான மக்கள் படகுகள் மூலம் அங்கிருந்து வெளியேறினர்.

தீவிரமாக போராடி வரும் தீயணைப்பு வீரர்கள்
போர்டோ (Bordeaux) நகருக்கு மேற்கே பிரான்ஸின் அட்லாண்டிக் கடற்கரையோரம் அமைந்துள்ள கேப் ஃபெரெட் (Cap Ferret) தீபகற்பத்திலிருந்து இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் படகுகள் மூலம் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக நகர அதிகாரிகள் கூறியதை மேற்கோள்காட்டி ஏஎஃப்பி (AFP) செய்தி வெளியிட்டுள்ளது.
கோடை விடுமுறைக்காலம் நிலவும் வேளையில் பிரான்ஸில் பரவி வரும் பல காட்டுத்தீக்களில் ஒன்றாக, அந்நாட்டின் புகழ்பெற்ற வைன் உற்பத்திப் பகுதிகளில் ஒன்றின் அருகே கொழுந்துவிட்டு எரியும் தீ, இதுவரை மன்ஹாட்டன் பகுதியைப் போல ஏறக்குறைய ஒன்றரை மடங்கு பரப்பளவை அழித்துள்ளது.
இன்னிலையில் காட்டுதீயை அழிக்க நீர் குண்டு வீசும் விமானங்களின் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர்.
தென்மேற்கு அட்லாண்டிக் கடற்கரையில் உள்ள ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை முகாம்கள் மற்றும் விடுமுறை இல்லங்களிலிருந்து வெளியேறுமாறு பிரெஞ்சு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந் நிலையில் காட்டுதீயால் நெருக்கடி நிலை இன்னும் “மிகவும் தீவிரமாக” இருப்பதாக எச்சரித்துள்ள ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், உதவி கோருவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் குடிமைப் பாதுகாப்பு வழிமுறையை பிரான்ஸ் செயல்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.