டிக்டோக் நேரலையின் போது மெக்சிகன் பிரபலம் மீது துப்பாக்கி சூடு
அழகு மற்றும் ஒப்பனை தொடர்பான காணொளிகளுக்கு பெயர் பெற்ற சமூக ஊடகத்தில் மிகவும் செல்வாக்கு மிக்க இளம் மெக்சிக்கன் பெண்ணொருவர் டிக்டோக் நேரடி ஒளிபரப்பின் போது சுட்டுக் கொல்லப்பட்டார்.
பாலின அடிப்படையிலான வன்முறை அதிகமாக உள்ள ஒரு நாட்டில் இந்த சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
23 வயதான வலேரியா மார்க்வெஸின் (Valeria Marquez) மரணம், பெண் கொலைக்கான நெறிமுறைகளின்படி விசாரிக்கப்படுவதாக மெக்ஸிகோவின் ஜலிஸ்கோ மாநில வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சபோபன் நகரில் செவ்வாய்க்கிழமை (13) மார்க்வெஸ் பணிபுரிந்த அழகு நிலையத்தில் ஒரு நபர் உள்ளே நுழைந்து அவர் மீது துப்பாக்கி பிரயோகத்தை முன்னெடுத்தார். இதனால், அவர் உயிரிழந்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எனினும், வழக்கறிஞர் அலுவலகம் எந்த சந்தேக நபரையும் அறிக்கையில் பெயரிடவில்லை. சம்பவத்திற்கு சில வினாடிகளுக்கு முன்பு, மார்க்வெஸ் தனது டிக்டோக் நேரடி ஒளிபரப்பில் ஒரு மேசையில் ஒரு பொம்மையை பிடித்துக் கொண்டு பின் தொடுநர்களுடன் தொடர்பில் இருந்தார்.
இதன்போது, அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டோக்கில் கிட்டத்தட்ட 200,000 பின்தொடர்பவர்களைக் கொண்டிருந்த மார்க்வெஸ், தான் இல்லாதபோது அழகு நிலையத்துக்கு யாரோ ஒருவர் “விலையுயர்ந்த பரிசை” வழங்க வந்ததாக நேரடி ஒளிபரப்பில் முன்னதாகக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் இந்த கொலையானது ஒரு கும்பல் தாக்குதலா? அல்லது பெண்களுக்கு எதிரான மற்றுமோர் வன்முறை சம்பவமா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.
லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியனில் பெண் கொலை விகிதத்தில் நான்காவது இடத்தில் பராகுவே, உருகுவே மற்றும் பொலிவியா ஆகிய நாடுகளுடன் மெக்சிகோவும் இருப்பதாக ஐக்கிய நாடுகளின் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியனுக்கான பொருளாதார ஆணையத்தின் அண்மைய தரவுகள் தெரிவிக்கின்றன.
2023 ஆம் ஆண்டில் 100,000 பெண்களுக்கு 1.3 பேர் மட்டுமே பெண் கொலை விகிதத்தில் உயிரிழந்துள்ளனர்.
மெக்சிகோ நகரம் உட்பட மெக்சிகோவின் 32 மாநிலங்களில் கொலை விகிதத்தில் ஜாலிஸ்கோ ஆறாவது இடத்தில் உள்ளது.
2024 ஒக்டோபரில் ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாமின் பதவிக்காலம் தொடங்கியதிலிருந்து அங்கு பெண் கொலை எண்ணிக்கை 906 ஆக பதிவாகியுள்ளதாக தரவு ஆலோசனை நிறுவனமான TResearch தெரிவித்துள்ளது.