கனடாவில் இடம்பெறும் மோசடிகள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை!
கடந்த சில நாட்களில் மட்டும் கனடாவின் ஹாலிஃபாக்ஸ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு விதமான பண மோசடி புகார்கள் பதிவாகியுள்ளன.
இதில் ஃபேஸ்புக் காதல் முதல் போலி முதலீட்டுத் திட்டங்கள் வரை பல அடங்கும். மிடில் சேக்வில் (Middle Sackville) பகுதியைச் சேர்ந்த ஒருவர், ஃபேஸ்புக் மூலம் ஒருவருடன் பழகி நெருக்கமான உறவை ஏற்படுத்தியுள்ளார்.
அந்த மர்ம நபர், தனது குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவச் செலவுகளுக்குப் பணம் தேவை எனவும் கூறி பாதிக்கப்பட்டவரின் நம்பிக்கையைப் பெற்றுள்ளார்.

இதை நம்பி அந்த நபர் சுமார் 300,000 டொலர் பணத்தை இழந்துள்ளார்.
லேக்சைட் (Lakeside) பகுதியைச் சேர்ந்த ஒருவர், ஃபேஸ்புக்கில் ஒரு பிரபலத்தின் முகத்தைப் பயன்படுத்தி போடப்பட்ட தங்க முதலீட்டு விளம்பரத்தை நம்பி 25,000 டொலர்களை இழந்துள்ளார்.
ஈஸ்டர்ன் பேசேஜ் (Eastern Passage) பகுதியில் ஒரு நபர் ஆன்லைன் முதலீட்டுத் திட்டம் தொடர்பாக 8,000 டொலர்களை இழந்துள்ளார்.
மோசடி பேர்வழிகள் அந்த நபரை சூம் அழைப்பில் வரவழைத்து, ஸ்கிரீன் ஷேரிங் (Screen Sharing) மூலம் அவரது வங்கி விவரங்களைத் திருடிப் பணத்தைப் பரிமாற்றம் செய்துள்ளனர்.
ஹெட் ஆஃப் செசெட்குக் (Head of Chezzetcook) பகுதியில் ஒரு பெண்ணைத் தொடர்பு கொண்ட மர்ம நபர், தான் வங்கியின் மோசடி தடுப்புப் பிரிவில் இருந்து பேசுவதாகக் கூறி, அவரது கணக்கில் இருந்து 10,000 டொலர் பணத்தை வேறொரு கணக்கிற்கு மாற்றச் சொல்லி ஏமாற்றியுள்ளார்.
நீங்கள் இது போன்ற மோசடிகளில் பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது தகவல் தெரிந்தால், உடனே 902-490-5020 என்ற எண்ணிற்கு ஹாலிஃபாக்ஸ் போலீஸாரை அழைக்குமாறு கோரப்பட்டுள்ளது.