இங்கிலாந்திற்குள் நுழைய முயன்றபோது சோகம்; கர்ப்பிணி பெண் உட்பட 12 பேர் பலி
ஆங்கில கால்வாயில் குடியேற்றவாசிகளின் படகு கவிழ்ந்ததில் கர்ப்பிணி பெண் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் கர்ப்பிணியொருவரும் ஆறு சிறுவர்களும் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸ் கடலோர பகுதியிலிருந்து இங்கிலாந்திற்குள் குடியேற்றவாசிகளுடன் செல்ல முயன்ற படகே கவிழ்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் பத்துபேர் பெண்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

50க்கும் மேற்பட்டவர்கள் மீட்பு
இந்நிலையில் கேப்கிரிஸ் நெஸ் என்ற பகுதியில் 50க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களில் இருவர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
படகில் அளவுக்கதிகமானவர்கள் காணப்பட்டனர்,அதன் அடிப்பகுதி வெடித்ததாகவும், ஒரு சிலரே உயிர்காக்கும் அங்கியை அணிந்திருந்தனர் எனபிரான்ஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

சிரியாவை சேர்ந்த ஆள்கடத்தல்காரர் ஒருவர் இதில் ஈடுபட்டிருக்கலாம்,உயிரிழந்தவர்கள் எரித்திரியாவை சேர்ந்தவர்களாகயிருக்கலாம் என ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன.
அதேவேளை ஆங்கில கால்வாயில் இந்த வருடம் அதிகளவானவர்கள் உயிரிழந்த சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        